சனி, 15 நவம்பர், 2008

தண்டிக்கப்பட வேண்டிய தவறுகள்!

  

          குப்பனுக்கும், சுப்பனுக்கும் மடை திறப்பதில் தகறாறு. இருவரும் ஒரு வயிற்றில் பிறந்து, ஒரு வாய்க்காலைப் பங்கு போட்டுக் கொண்டு, தங்களுக்குப் பிரிந்த வயல் வெளியில் பாடுபட்டு வரும் விவசாயிகள் தான்...

          

          குப்பன், சுப்பனை ஆத்திரத்தில் கைகளை வெட்டி விட, சுப்பனுக்கு மடை மாற்றி விடவும் கைகளற்றுப் போயிற்று.. சுப்பன் மருத்துவரிடம் செல்லும் முன், வழக்குறைஞரிடம் சென்றான்... விளைவு... வினாயகமும், சண்முகமும் குப்பன் சொத்தையும், சுப்பன் சொத்தையும் பங்கு போட்டுக் கொண்டனர்...

         

             அது சரி.... அது யாரவர்கள்.. வினாயகம், சண்முகம்...!? அட... இது புரியாமல் இருக்குமா உங்களுக்கு...!? முறையே, குப்பன்... சுப்பனின் வழகுறைஞர்கள் தான்...  கதை எனும்போது, வழக்கறிஞர்களின் சாமர்த்தியத்தை மெச்சலாம்..

          

              உண்மை நிலை இன்னும் மோசமானதாகவே இருக்கிறது. எந்தத் தொழில் புரிவதற்காக, இன்றைய தலைமுறை பயில்கிறதோ.. அப்போதே, எதைத் தடுக்க வேண்டியிருக்கிறதோ அதனை செய்து பார்க்கிறார்கள்..

         

               வழக்குறைஞர்கள், நாட்டில் குற்றங்கள் குறைய உதவி செய்வதற்காக உருவாக்கப் பட வேண்டும்.. ஆனால், படித்து முடிக்கும் முன்பே அவர்கள் குற்றங்கள் செய்வது எப்படி எனப் பயின்று வருகிறார்கள்.. சில ஆண்டுகளுக்கு முன்னர், சேலம் சட்டக் கல்லூரியில் பல குற்றங்கள் நடந்த்து.. தற்போது சென்னை சட்டக் கல்லூரி...

           

            வழக்கறிஞராகப் படியுங்கள் என்றால், நாங்கள் குற்றவாளிகளாவது எப்படி என செய்முறை விளக்கங்களோடு பயில்வோம் என்கிறார்கள்...

          

             இதனைத் தடுப்பது எப்படி...!? அரசு என்ன செய்ய இயலும்..!? எதிர் கட்சிகள் முதல்வர் தன் பதவியைத் துறக்க வேண்டும் என்கின்றன.. எந்த ஒரு அரசும், குற்றவாளிகளின் நெஞ்சினில் குற்றச் செயல் புரிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய பிறகு, அதனைத் தடுத்து நிறுத்தவியலாது.. கல்லூரியில் நடப்பதைத் தடுத்தால், வீடு தேடிச் சென்று குற்றம் புரிவார்கள்.. களங்கள் மாறலாம்.. மனங்கள் மாறுமா!?

          

              அப்படியானால் இதனைத் தடுக்க இயலவே இயலாதா..!? எதைத் தடுக்கப் பயில்கிறார்களோ, அதைச் செய்பவர்களாக மாறிப் போகும் இவர்களை என் செய்வது..!?

         

              12 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகம் நாவரசு கொலை பற்றி பரபரப்பாகப் பேசிய போது, இன்றைய ஆட்சியே நடந்து கொண்டிருந்தது. கல்லூரியில் இளம் மாணவர்கள் வதைத் தடுப்புச் சட்டம் ( ரேகிங் தடுப்பு ) கொண்டு வந்தார்.. அவை, கல்லூரிகள் கைகளில்  மிகப் பெரும் ஆயுதத்தைத் தந்தது..

          

             ஆம்.. மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர மறுத்த கல்லூரி நிர்வாகங்கள், உரிமை கோரிய மாணவர்களை ஒடுக்க வதைத் தடுப்புச் சட்டங்களை உபயோகித்தன.. தேவையற்ற பயங்களை மாணவர்கள் மனதில் நிர்வாகங்கள் விதைத்தன..

           

             அதற்காக, மாணவர்கள் தங்கள் முதுநிலை மாணவர்களிடம் வதை பட விட முடியுமா!? கல்லூரி நிர்வாகங்களுக்கு மாணவர்களைக் கண்டிக்கும் உரிமை வழங்கிய சட்டம், நிர்வாகங்களுக்கு கடிவாளம் இட மறந்து போனது..

           

             இப்போது சட்டக் கல்லூரியில் நடந்துள்ள சம்பவங்கள் போல் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே அரசின் வேலை என்று நினைத்தலாகாது.. வழக்கறிஞர்கள் குற்றவாளிகள் ஆவதைத் தடுப்பது மட்டுமல்ல.., கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை தங்கள் கைகளில் உள்ள அதிகாரங்களின் காரணமாய் மாணவர்களை மிரட்டும் போக்கையும் தடுத்து நிறுத்த வேண்டும்..

           

            வழக்கறிஞர்கள் குற்றவாளிகள் ஆவதைத் தடுப்பதைக் காட்டிலும், குற்றவாளிகள் வழக்கறிஞர்கள் ஆகி விடக் கூடாது.. இன்றைக்குக் கொலை வெறியோடு கத்தியைச் சுமந்தவனுக்கு, கொலைகாரனைப் பற்றி, கொலையினைப் பற்றி என்ன கவலை வந்து விடப் போகிறது!? அவனே ஒரு குற்றவாளி எனும்போது, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகவே அவனது கல்வி பயன்படும்..

             

               எனவே, இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எவ்வகையிலும் வழக்கறிஞர்களாவதினை அரசு தடுக்க வேண்டும்.. இது போன்ற வெளிப்படையான குற்றங்களுக்கு சாட்சிகள் தேவையில்லை.. கைப்புண்ணுக்குக் கண்ணாடி அவசியமில்லை.. இந்த சம்பவத்தில் சம்மந்தப் பட்ட எந்த மாணவனும், வழக்கறிஞராகக் கூடாது.. அரசு, அவர்களுக்கு வேறு தொழிலுக்கு ஏற்பாடு செய்யட்டும்...கடுமையான சட்டங்கள் இயற்றப் பட வேண்டும்

            

                அதே வேளையில், எதிர்காலத்தில், கல்லூரி முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர், மாணவர்களைப் பயமுறுத்த இந்த சட்டங்களை பயன்படுத்தும் அவலத்தினைப் போக்க, பொதுமக்கள் கொண்ட ஒரு குழுவினை ஒவ்வொரு கல்லூரியிலும் அமைக்க வேண்டும்.. மாணவர்களின் பெற்றோரும் இருக்கலாம் என்றாலும், பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்.. அவர்களின் கண்காணிப்பின் பேரிலேயே கல்லூரிகள் தங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதாய் அறிவுறுத்தப் பட வேண்டும்.. இல்லையேல், எடுக்கப்பட்ட நடவடிக்கை செல்லாது என்ற நிபந்தனையோடு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்...

            

              மனிதாபிமானமற்ற மருத்துவர்கள், கற்றுத் தரத் தெரியாத ஆசிரியர்கள், குற்றவாளிகளாகத் துடிக்கும் வழக்கறிஞர்கள், திருடனாவது எப்படி எனப் பழகும் காவலர்கள் நாட்டுக்குத் தேவையற்றவர்கள் என்பதோடு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை விட, அந்தந்த தொழில்களின் தர்மத்தினை மீறுவோருக்கு, இரட்டிப்பு தண்டனைகள் வழங்கப் பட வேண்டும்.. அவர்கள் அந்தத் தொழிலினை மீண்டும் புரியாமல் தடுக்க வேண்டும்..

             

              அரசு சிந்திக்குமா..!? சரியான முறையில் செயல்படுமா!? காத்திருப்போம்.. கவனிப்போம்...