வியாழன், 9 ஏப்ரல், 2009

ஜகதீஷ் டைட்லரும்.., பிரபாகரனும்..!

வழக்கம் போல் நேற்றிரவு என்டிடிவி வைத்து செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன். தலைப்பு : ஜகதீஷ் டைட்லரைப் பற்றியது.. காங்கிரஸ் அவருக்கு தேர்தலில் நிற்க இடம் தருவது சரியா..!? அவர், சீக்கியர்கள் படுகொலை சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களில் ஒருவர் என்பது சரிதானா..!? யார்தான், அக்கொலைகளுக்குப் பொறுப்பு என்பதாக விவாதங்கள் போய்க் கொண்டிருந்தது...!


ஊடக நிருபர் ஒருவர் மிகப் பரிதாபமாக, சிபிஐ தரப்பிலிருந்து, டைட்லருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லையென்று சொல்லப்பட்டபோது, ஒரு கேள்வியினை எழுப்பினார்... 3000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.. அதற்கு யாராவது காரணமாக இருந்திருக்கத்தானே வேண்டும்..!? அது யார்..!? என...!நானாவதி கமிஷன் டைட்லரை குற்றவாளியாய் காண்பிக்க, சிபிஐ, அவர் குற்றமற்றவர் அல்லது குற்றம் நிரூபிக்கப் படாதவர் என்கிறது..!


25 வருடங்கள் போய்விட்டன. இன்னும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்படவில்லை.. ஜகதீஷ் டைட்லர் போன்றவர்கள் இன்னும் எத்தனைக் காலம் உயிரோடு இருந்திடப் போகிறார்கள்..!? அவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவ்ர்கள் என்று இன்னும் சில ஆண்டுகளில் தீர்ப்பு கிடைக்குமாயின், அவர் உயிரோடு இருந்து அந்தத் தீர்ப்பினைப் பெறுவாரா.. மனம் வருந்துவாரா..!? அவர் இயற்கையாக இறந்து விட்டார் எனில், அதன் பிறகு அவர் அக்குற்றங்களுக்குப் பொறுப்பு எனக் கண்டறிந்து என்ன பலன்..!?


அப்படியானால், மற்ற குற்றவாளிகள் மட்டும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்..!? அவர்களையும் இதே போல் சுதந்தரமாக உலவ விடலாமே..!? 


ஆனால், பிரச்சனை இன்னும் கூட பெரிது..! ஈராக்கில், ஜார்ஜ் புஷ் செருப்படி வாங்கியது போல், தமிழரான ப. சிதம்பரம், டைட்லருக்கு, சிபிஐ அளித்த நற்சான்றிதழ் பத்திரத்தினை வாசித்ததினால், செருப்படி விழுந்திருக்கிறது..! ப.சி செருப்படிக்குத் தகுதியானவரா என்பதை பிறகு பார்ப்போம்..!


ஆனால், இந்நிகழ்வுகளில், ஜகதீஷ் டைட்லர், பல்ராம் ஜாக்கர், சஜ்ஜன் குமார், மற்றும் சிலர் மட்டுமே பொறுப்பாவார்களா..!? காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துக்கு எப்பொறுப்புமே இல்லையா..!?


குஜராத்தில், கலவரங்களைத் தொடர்ந்து தூண்டிவிட்டுப் பேசிய அரசியல்வாதிகள் இன்னும் பதவியில்தான் இருக்கிறார்களில்லையா..!? அவர்கள் சார்ந்த கட்சிக்கு தார்மீகப் பொறுப்புகளில்லையா..!? என்றைக்கு இந்த தேசம், குடிமகன்களின் உயிருக்கு மரியாதை தரப் போகிறது..!? 



இறந்த சீக்கியர் 3000 பேரில் எத்துனை மன்மோகன் சிங்குகள் இழந்திருக்கும் வாய்ப்புகள் உண்டோ..!? ஏன், அவர்களில் ஒரு அப்துல் கலாம் கூட கிட்டியிருகலாம்.. வாய்ப்பில்லை என மறுக்க முடியுமா..!? அப்படியானால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் சமமானவன் அல்லவா..!?


உலகில் சாதித்தவர்களின் உயிர் மட்டுமேதான் பெரிது, சாதிக்காதவர் உயிரைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை என்றால், அதை விடக் கோமாளித் தனம் ஏதுமில்லை..! இன்றைக்கு சாதிக்காதவனாக ஒரு குடிமகன் இருக்கலாம்.. ஆனால், சோனியாவோ, அத்வானியோ அவர் உயிருக்குத் தரும் மரியாதையினை ஒவ்வொருவரும் தன் உயிருக்குத் தரக் கூடாதா என்ன..!?


எனில், டைட்லர் போன்ற அரசியல்வாதிகளால் கொல்லப்பட்ட உயிர்களுக்கு கிடைக்கும் நியாயம் என்ன..!? ராஜிவ்காந்தியின் உயிர் மட்டும்தான் உயிரோ..!?


டைட்லரோ, மற்ற காங்கிரஸ் தலைவர்களோ தெருவிலிறங்கி கத்தியும், துப்பாக்கியும் தூக்கிக் கொண்டு துரத்தவில்லை என்று சொன்னால், கொலைகளை நேரடியாக செய்தவர்களை மட்டும் தண்டித்தால் போதுமா..!?


அப்படியானால், ராஜிவ் கொலையினை செய்த தாணு அங்கேயே மடிந்ததாக ஞாபகம்.. அவருடன் திட்டத்தில் இருந்த சிவராசனும் கூட மடிந்து போனதாகத்தான் செய்தி... பிறகெதற்கு பிரபாகரன் தேடல்..!? தமிழகத்தில் நிகழ்ந்த ராஜிவ் கொலைச் சம்பவத்திற்கு ஈழத்திலிருக்கும் பிரபாகரன் பொறுப்பாக முடியுமானால், தங்கள் வீடுகளுக்குள்ளிருந்து ஒரு இனத்தின் மீதே வெறுப்பு விதை தூவிய, தூவும் அரசியல் தலைவர்கள், நிகழும் நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக மாட்டார்களா..!?


பிரபாகரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொன்னால், இந்த தலைவர்களையெல்லாம் மட்டும் விட்டு விடலாமா..!? பிரபாகரன் கூட, ராஜிவ் கொலை நிகழ்ந்துவிட்ட ஒரு தவறு எனச் சொன்ன ஞாபகம்.. ஆனால், ராஜிவோ சீக்கியர்கள் படுகொலைகள் வெகு சாதாரணம் என்றல்லவா சொன்னார்..!? இதோ, காந்தி குடும்பத்தின் இன்னொரு இளம் வரவு, சிறுபான்மையினரைப் பற்றி எப்படிப் பேசியிருக்கிறது..!? வருண்காந்தி இன்றைக்கு செய்தது தவறு என்றால், ராஜிவ் அன்றைக்கு சொன்னவை மட்டும் எப்படி சரி..!? ராஜிவ்தான் இன்றைக்கு இல்லையே என்றால்.., ராஜிவின் பேச்சுக்குப் பிறகு அன்றைக்கே காங்கிரஸ் என்ற கட்சி இல்லாமல் நாட்டின் அடிப்படை சட்டமானது, அதனைத் தகுதியிழப்பு செய்திருக்க வேண்டும்..! வன்முறைகளைத் தூண்டிவிடும் அரசியல் தலைவர்களைக் கொண்ட கட்சிகள் கலைக்கப்பட்டே தீர வேண்டுமாய் ஒரு சட்டம் என் கனவில் தான் நிறைவேற வேண்டும் என நினைக்கிறேன்..


நம் நட்டு சட்டங்கள் எப்போது திருத்தப்படும்..!? ( வாய்ப்பே இல்லா கனவு.. ) ஒரு அரசியல் கட்சியின் அடிமட்டத் தொண்டன், கட்சி சார்பாக செய்ய்ம் கொலைகளுக்கு கட்சியின் தலைமையே பொறுப்பேற்க வேண்டுமாய்.. குறைந்தபட்சம், அந்தக் கட்சியின் அரசியல் செய்யும் தகுதியிழப்பு என்ற தண்டனையாவது கிடைக்காதா..!?

.

புதன், 18 பிப்ரவரி, 2009

நாட்டின் எதிர்காலங்கள் உங்கள் கைகளில்..

.

என் மனநிலை காரணமாகவா அல்லது என்னைச் சுற்றி நடப்பவையே அப்படித்தானா தெரியாது.., என் மனதில் பதிந்த சம்பவங்களில் பெரும்பாலும் சோகமானவை. இந்த சம்பவம் நடந்து சில வருடங்கள ஆகிப் போயிற்று.. அப்போது நான் சென்னையில்தான் இருந்தேன் என்ற போதும், எதன் காரணமாகவோ விடுப்பெடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றிருந்தேன்.

சரியாக அன்றைக்கு 18 -02. பள்ளிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மாதிரித் தேர்வுகள் நடந்து கொண்டிருந்த நேரம். இந்தப் பதிவிற்கு உரியவன் எங்கள் வீட்டருகே வசித்து வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். அப்பா வழியில் சற்று தூரத்து உறவும் கூட. அவனுடைய அப்பா எங்களோடு அத்தனை உறவு பாராட்ட மாட்டார் என்ற போதும், அவனும் , அவனின் ஒரே மூத்த சகோதரியும், என்ன படிக்கலாம்..., என்ன செய்யலாம் என்பதில் எனது மற்றும் சகோதரியின் அறிவுரைகள் கேட்டு வருவது வழமைதான்.

மிகவும் அமைதியான, பயந்த சுபாவமுள்ள பையன். இன்றைக்கு அவன் இல்லை என்பதற்காக சொல்லவில்லை. அத்தனை மரியாதை. அத்தனை நேர்மையான பையன். எப்படி இத்தனை நல்லவனாய் என ஆச்சர்யமூட்டிய பையன். அவன் அப்போது பள்ளி இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்தான். மாதிரித் தேர்வுகள் எழுதினான்.

தேர்வு எழுதிக் கொடிருந்தபோது, தேர்வறையில் இவனுக்கு அருகில் கீழே சிறு தாளொன்று பறந்து கொண்டிருந்திருக்கிறது. அதைக் கவனித்தத் தேர்வுக் கண்காணிப்பாளர் அருகில் வந்து எடுத்துப் பார்த்திருக்கிறார். பார்த்து எழுதுவதற்காக தயாராக பதில் எழுதி வைக்கப்பட்டிருந்த தாள் அது. ஆசிரியைக்கு அதைக் கண்டவுடன் பயங்கரமான கோபம். இவனை எழுப்பி, கணக்கற்று அடித்திருக்கிறார். இவனோ, நான் அந்தத் தாளினை உபயோகிக்கவில்லை.. என் கையெழுத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள் எனச் சொல்லியிருக்கிறான். அவர் கேட்கவே இல்லை.

தேர்வறையிலிருந்து அவனை வெளியேற்றியதோடு கண்டபடி திட்டவும் செய்திருக்கிறார். இவ்வருடம் நீ தேர்வெழுத விடாமல் செய்கிறேனா இல்லையா எனப் பார் என்றெல்லாம் சொல்லியிருந்திருக்கிறார். ஏற்கனவே பயந்த சுபாவமுள்ள பையன். என்ன செய்வதென்றறியாமல் பள்ளியிலேயே அங்கேயும், இங்கேயுமாய் சிறிது நேரம் உலாத்தியிருக்கிறான். பள்ளி மைதானம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலேயே மிகப் பெரிது.. நாங்கள் படிக்கையில், எங்காவது மூலையில் சென்று அமர்ந்து கொண்டு விட்டால் கண்டு கொள்வது மிக சிரமம் என்பதால்.., எங்கெங்கோ சென்று அமர்ந்து கொள்வோம்.. ( ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தால் தானே... )

அப்படிப்பட்ட பள்ளியில் மனம் போனபடி சுற்றிய அவன், இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்து பள்ளியில் ஒரு மூலையில் நடந்து கொண்டிருந்த கட்டிட வேலைகளுக்காகக் கிடந்த கயிறொன்றினை எடுத்துக் கொண்டு, அவனது வகுப்புக்கே வந்து.., ( தேர்வறை அதுவல்ல.. ) விட்டத்தில் கயிற்றைக் கட்டித் தொங்கிப் போனான். பெஞ்சினை அவன் உதைத்த ஓசைகள் கேட்டிருக்கின்றது. ஆனால், யாரும் சென்று பார்க்கவில்லை. உயிர் போய் விட்டது.

அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டார். மாணவர்கள் போராட்டம் செய்து பார்த்தனர். இதற்கிடையில், உண்மையாகவே தாளினை தயார் செய்து வைத்திருந்து உபயோகித்த மாணவன், அன்றைய இரவெல்லாம் கனவு கண்டு பயந்து அழுது, ( இருவரும் நண்பர்களாம்.. ) இருவருக்கும் பொதுவான வேறு பள்ளியில் படிக்கும் நண்பனிடம் சொல்லித் தன்னாலேயே தன் நண்பன் இறந்து போனதாக சொல்லித் துடித்திருக்கிறான்.

அப்போது செய்தித்தாள்களெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு இந்த சம்பவத்தினை எழுதின. ஆசிரியை, அவன் தான் எழுதினான்,தான் பார்த்தேன் என சாதித்ததாகவும் செய்தித் தாள்கள் எழுதின. அவருக்கு என்ன..!? அடுத்த வருடம் மாறுதலோடு பணி மீண்டும் கிட்டிவிட்டது. இழப்பு யாருக்கு...!?

மேலும், அது யாருடைய கையெழுத்து என அவனுக்குத் தெரிந்தும் இருந்திருக்கிறது. இருந்தும் மூச்சு விடாமல் தன் மூச்சையே நிறுத்திக் கொண்டானே...

இறந்து விட்டதால் சொல்லவில்லை. சில பல பிரச்சனைகளில் அந்த வயதிலேயே, அவனது நேர்மை கண்டு வியந்திருக்கிறேன். தன்னால் மருத்துவமெல்லாம் படிக்க இயலாது. எனக்கேற்றது போல் எளிதான படிப்பு தான் ஏதேனும் படிப்பேன் எனச் சொல்வான். நான்கைந்து வருடங்கள் கடந்த பின்னும் இந்த தேதி வருகையில் அவன் நினைவு வருவது தவிர்க்க இயலாதது. :(

மிக மிக பயந்த சுபாவமுள்ள பையன் அவன். அவன் உயிரை விடத் துணிவான் என்பதை எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை...

ஆனால், தேர்வெழுத முடியாது போனால் என்ன செய்வது என்ற அழுத்தமே அவனுக்கு அந்த்த் துணிச்சலைக் கொடுத்திருக்க வேண்டும்.

அவர்கள் வீட்டில் அவன் ஒரே பிள்ளைதான். அவர்கள் துடித்த துடிப்பு... பிறகு, அந்தத் தாளை எழுதிய மாணவன், தான் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும், தன் நண்பனின் இறப்புக்குக் காரணமான அந்த ஆசிரியைக்கு வேலை நீக்க உத்தரவு வாங்கித் தந்தே ஆக வேண்டும் எனத் துடித்தபோது, அவன் எதிர்காலம் முக்கியம் என விட்டு விட்டார்கள்..

ஆசிரியை, அதன் பிறகும் தன் கடமையைத்தான் தான் செய்ததாகச் சொன்னதாகக் கேள்வி...

மன்சாட்சியற்று, விசாரிக்காமல் முடிவெடுத்து, அதன் பிறகும் மனம் கலங்காமல் செயல்படுபவர்களை என்ன சொல்ல இயலும்..!?

ஆசிரியப் பணி என்பது புனிதமான பணி... ஆனால், இன்றைய ஆசிரியர்கள்...!?


இன்றைக்கு தமிழகத்தில் மெக்காலே கல்வி முறையிலிருந்து மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்களுக்கு அவ்வப்போது புத்தாக்கப் பயிற்சிகளும் நடைபெறுகின்றன.

ஆனால், அவையெல்லாம் என்ன பயன் தருகின்றன என்பதுதான் கேள்வி. பாடங்களைக் கற்பிக்கும் முறை மாறியிருப்பதற்காக மட்டும் பயிற்சி கொடுத்து என்ன பயன்..!?

ஆசிரியர்கள் நல்ல மனநிலையில் தான் இருக்கிறார்களா.., இவர்களின் கீழ் மாணவர்கள் படிக்கலாமா என உறுதி செய்து கொண்டு ஆசிரியர்களை நியமிப்பதும், அவர்களின் மனநிலை தொடர்ந்து எவ்வித வக்கிர, காழ்ப்புணர்ச்சி, மற்றும் மனச்சிதைவு ( குடும்ப நிகழ்வுகளால் ) ஏதும் இல்லாமல் இருக்கிறார்களா என உறுதி செய்து கொள்வதுமல்லவா முக்கியம்...


ஏனென்றால், அவர்கள் தான் நாட்டின் எதிர்காலங்களை உருவாக்குபவர்கள்..


.

சனி, 31 ஜனவரி, 2009

முத்துக்குமாரும் விஸ்வநாத் பிரதாப் சிங்கும் ….

 

27-01-2009 அன்று இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், உயர்திரு. ரா. வெங்கட்ராமன் அவர்கள் இயற்கை எய்தினார். இந்திய அரசு ஒரு வார கால துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்தது.

 

27-11-2008 அன்று, இந்தியப் பிரதமர்களில் என் நினைவில் பதிந்தவரை சிறந்த இந்தியப் பிரதமராக செயல்பட்ட, இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்காகப் போராடிய 10 ஆம் இந்தியப் பிரதமராகப் பதவி வகித்த உயர்திரு. விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள் இயற்கை எய்தினார். அவர் இறந்த செய்தி, ஊடகங்களில் சொல்லப்பட்டது.

 

நாடே மும்பைத் தாக்குதலின் பிடிமானத்தில் சிக்குண்டு, அதிர்ந்து போயிருந்ததால், ஒரு பெரும் தலைவர் இறந்ததற்கான அறிகுறியே அறியப்படாமல் அவரது இறப்பு பெருவாரியாகப் பதியப்படாமல் போனது.

 

மும்பைத் தாக்குதலில் இறந்த சாமான்யர்களுக்குக் கிடைத்த மரியாதையில் முன்னாள் பிரதமராக பதவி வகித்த ஒரு தலைவருக்குக் கிடைக்கவில்லை என்று சொன்னால், இந்திய அரசு நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயிரையும், பிரதமரின் உயிருக்கு சமமாக மதிக்கத் துவங்கி விட்டதா…!? இது உண்மை என்றால், நாம் நிச்சயம் மகிழலாம். அப்படியானால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயிரின் மதிப்பும், உயர்திரு. மன்மோகன் சிங் அவர்களின் உயிரின் மதிப்பும் ஒன்றுதானா…!? இந்தியா தன் நாட்டுக் குடிமக்களின் பாதுகாப்பின் மேல் அத்தனை அக்கறை கொண்டுவிட்டதா……!???

 

ஏன் இந்த சந்தேகம் வந்ததென்று கேட்கிறீர்களா…!? 

இதோ, ஒரு முன்னாள் இந்தியப் பிரதமரின் தன் குடிமக்களுக்கெதிரான இனப் படுகொலைகளைப் பற்றி வழங்கிய அருளுரை....

“When a great tree falls, the earth shakes.”

 

இதனைத் தமிழ்ப்படுத்தினால், “ஒரு ஆலமரம் விழும்போது, நிலத்தில் சிறு அதிர்வுகள் தொடர்வது நிகழத்தான் செய்யும்”.

 

இது 1984 ஆம் ஆண்டு திருமதி. இந்திராகாந்தி அவர்களின் படுகொலைகளுக்குப் பிறகான பேட்டியில் அவரது மகனும், அவருக்கு அடுத்துப் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டவருமாகிய உயர்திரு. ராஜிவ்காந்தி அவர்கள் கூறிய அருமையான கருத்துரையே.

 

அதற்கும் மேல், அப்போதைய காங்கிரஸ் முக்கியத் தலைவராக இருந்த திரு. பல்ராம் ஜாக்கர் வெளியிட்ட அறிக்கை,

“To preserve the unity of India, if we have to eliminate 20 million Sikhs, we will do so.”

 

அதாவது, இந்திய ஒற்றுமையைக் காக்க 2 (இரண்டு ) கோடி சீக்கியர்களைக் அகற்ற நேருமானால் ( எப்படியென்பதை நீங்களே யோசிங்க… ), அதை நாங்கள் நிச்சயம் செய்வோம்.

 

என்ன சொல்ல இருக்கிறது…, இதற்கும் மேல்…?????

 

குவாத்ரோச்சியா… பிரபாகரனா.. யார் வேண்டும்…???

 

உயர்திரு. விஸ்வநாத் பிரதாப் சிங்கின் இறப்பு அதிர்வுகளை ஏற்படுத்தாதது, அவர் மும்பைத் தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் நிகழ்ந்ததால் மட்டுமாக இருக்க இயலுமா…!?

 

மேலே நாட்டின் குடிமக்களைப் பற்றிய ஆளும் அரசினரின் கொள்கை விளக்கங்கள் நம்மிடம் இருக்கிறது இல்லையா…. அப்படியானால், ஏன் ஒரு தலைவரின் இறப்பினை இன்றைய அரசு பெரும் பதிவாகக் கண்டுகொள்ளவில்லை…??

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர். ராஜிவ்காந்தி அவர்களின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து போஃபர்ஸ் ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்த திரு. வி.பி. சிங் அவர்கள், அவ்வூழலில் பின்னாளில் குற்றம் சாட்டப்பட்ட அன்றைய பிரதமரான, ராஜிவ் காந்தி அவர்களால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

 

இன்றைக்கு, திரு. ராஜிவ்காந்தி அவர்களின் துணைவியார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியே உயர்திரு.மன்மோகன் சிங் அவர்களைப் பிரதமராகக் கொண்டு நடந்து வருகிறது. எனில், முன்னாள் பிரதமராகிய உயர்திரு. விஸ்வநாத் பிரதாப் சிங்கின் இறப்பு கண்டுகொள்ளப் படாமல் போனதில் வியப்பேதுமில்லையே…???

 

மேலும், ராஜிவ்காந்தி அவர்களோடு போஃபர்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட திரு. ஒட்டாவியா குவாத்ரோச்சி அவர்களை இந்தியாவுக்குள் கொண்டு வர இயலாமல் இந்தியத் தலைமை காவல் மற்றும் உளவு அமைப்பான ( ரா அல்ல ) சி.பி.ஐ தடுமாறுகிறது. போஃபர்ஸ் வழக்கு எதைப் பற்றியது என்பது பெரும்பாலும் நாம் எல்லோரும் அறிந்ததுதான்.

 

ராணுவத் தளவாடம் வாங்கியதில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட அந்த வழக்கிலிருந்து இறந்து போனதால் மட்டுமே விசாரிக்க முடியாமல் போய்விட்ட காரணத்தினால், முன்னாள் பிரதமர். திரு. ராஜிவ்காந்தி அவர்களின் பெயர் வழக்கிலிருந்து நீக்கப்பட்து. ஏனெனில், அவரது தரப்பு விளக்கங்கள் தர அவரால் மீண்டு வர இயலாது அல்லவா…!? ஆனால், குவாத்ரோச்சியைக் கொணர்ந்தால், என்ன நடந்தது என்பதனை நிரூபிக்க இயலுமே. என் செய்வது..!? இன்றைக்கு நடப்பது ராஜிவ் அவர்களின் துணைவியார் தலைமை வகிக்கும் கட்சியின் ஆட்சிதானே… நடக்குமா என்ன…!?

 

ஒருவேளை, உயர்திரு. விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் இறப்பு, மும்பைத் தாக்குதலில் இறந்த சாமான்யர்களின் இறப்பின் காரணமாக மட்டுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று சொல்வார்களேயானால், திரு. ராஜிவ்காந்தி அவர்கள் ஒருவரின் இறப்புக்காக ஏன் தமிழினப் படுகொலைகளை மேம்போக்காகத் தடுப்பது போல் பாசாங்கு மட்டுமே செய்ய வேண்டும்…!????

 

சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி கொடுத்து, தளவாடங்கள் வழங்கி, உளவுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு, ”பாதுகாப்பு வளையம்” என்று சொல்லி சிங்கள அரசு செய்யும் தமிழ் இனப் படுகொலைகளைக் கண்டும் காணாமல் இருந்து விட்டு, போர் முடியும் தருவாயில் சென்று, அப்பாவித் தமிழர்களை விட்டு விடுங்கள் என்று சொல்லி வருவது வேடிக்கை இல்லையா…!?

1988 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படை, இலங்கையில் செய்த காரியங்கள் என்னென்ன…!? தினந்தோறும் செய்திகளைக் கேட்போரும், செய்தித்தாள் வாசிப்போரும் அறிந்த ஒரு செய்திதான். இன்றைக்கு முல்லைத் தீவுப் பகுதியில், தமிழின மக்கள் வேற்றிடம் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் 4 லட்சங்களுக்கும் அதிகமான மக்கள் அங்கிருக்கையில், அவர்களைப் “பாதுகாப்பு வளையம்” என்று அறிவித்து விட்டால், அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கையையும் குறைக்க சிங்கள அரசுக்குக் காரணம் கிடைத்து விடுமில்லையா…???

எந்தப் படுகொலையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். அது ராஜிவ்காந்தி அவர்களின் இறப்பாகட்டும், தமிழர்களின் அல்லது சீக்கியர்களின் இறப்பாகட்டும்… ஆனால். திரு. ராஜிவ்காந்தி அவர்களின் கூற்றுப்படி, “ ஒரு ஆலமரம் விழும்போது அதன் பின்னான நில அதிர்வுகள் நிகழ்வது வெகு இயல்பான “ ஒன்றென்றால், இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் தமிழின மக்களைப் படுகொலை செய்ததும், தமிழினப் பெண்களை பலாத்காரம் செய்த செயலுக்கும் பின்னான இயல்பான அதிர்வாக 1991 மே 21 சம்பவம் ஏன் பார்க்கப்படவில்லை….????

 

அப்படிப் படுகொலை செய்யப்பட்ட மனிதரின் பெயருக்குக் களங்கம் விளையாமலிருக்க திரு, குவாத்ரோச்சி அவர்கள் இந்தியாவின் கைகளில் இன்னும் பிடிபடாமல் நழுவ முடிகிறது. பிரபாகரனுக்கு இங்கே வாதாட யாரும் தயாராக இல்லை. அதே நேரத்தில், போஃபர்ஸ் என்பது ராணுவத் தளவாடம். அது சரியான செயல்திறனற்ற ஒன்றாக இருந்திருந்தால், எத்தனை ராணுவத்தினரின் உயிர் சென்றிருக்கும்…???? அந்த ராணுவத்தினரின் உயிரை விட, இந்தியப் பிரதமராகப் பதவி வகித்து விட்டதால் மட்டுமே அப்படி ஒருவரின் உயிர் என்ன வெல்லக்கட்டி…!?

 

போஃபர்ஸின் செயல்திறன் நிரூபிக்கப் பட்ட ஒன்று எனச் சொல்பவர்களுக்கு, ஒரு கேள்வி.. போஃபர்ஸுக்குப் பதிலாக நிராகரிக்கப்பட்ட தளவாடத்தின் செயல்திறனை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா…???? அது, போஃபர்ஸை விட மேம்பட்டது என்று கொண்டால், இன்னும் பல ராணுவத்தினரின் உயிர்களைக் காத்திருக்கும் வாய்ப்பு உண்டல்லவா..!?

இப்போது சொல்லுங்கள், இந்திய அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டியது குவாத்ரோச்சியைப் பிடிப்பதா அல்லது வேறு ஏதேனும் ஒரு செயலா…!?

 

இப்படி, ஒரு உயிருக்காக இனப் படுகொலைகளை ஆதரித்த, போய்விட்ட உயிர்களைப் பற்றியக் கவலையான கேள்விக்கு, அது வெகு இயல்பாக நிகழக் கூடிய ஒன்று என மனிதாபிமானமற்று பேசிய ஒரு உயிர் போய்விட்டது என்ற காரணத்தினால், ஒரு இன மக்களுக்கு உதவ வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பித்துக் கொண்டு, அவர்களைப் பழிவாங்க, அவர்களுக்கெதிரான அரசுக்கு உதவிகள் வழங்கும் அரசு ஆட்சியிலிருக்கையில், முத்துக்குமார் போன்ற இளைஞர்கள் உயிரை ஈந்து என்ன பயன்…????

 

இனி ஒரு தமிழனும் வீணாக உயிர் துறக்காதீர்கள். இலங்கையில் போகும் அப்பாவித் தமிழர்களின் குருதியே போதும் போதும் என்ற அளவில் போய்க் கொண்டிருக்கிறது… இதற்கு முடிந்தால் மஹாத்மாவின் வழியில் ஒரு வழி காண முயலுவோம். இல்லையேல்……. :(

திங்கள், 26 ஜனவரி, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

 

 

சகோதரி பிரியா அவர்கள் என்னை வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற பெயரில் பதிவொன்றினை இடுமாறு கேட்டுக் கொண்டார். அவர் கேட்டுக் கொண்டு இரு நாட்கள் ஆகியும் என்னால் எழுத முடியாமல் போன சூழ்நிலைக்காக வருந்துகிறேன்.

என் இந்த வலைக்குடிலே என் எழுத்தைக் காணாது மாதக் கணக்கில் இருந்து போய் விட்டது.. இதில், இரு நாட்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தாமதம் தானே...!?

 எல்லைக்கோடு வலைக்குடிலில் இப்பதிவினை இடுவதா, அல்லது இதிலிடுவதா எனக் குழப்பம் வந்தபோதும், இங்கேயே இடுவதென முடிவெடுத்தேன்.

ம்… தமிழ்.. வழக்கொழிந்த சொற்கள் இருக்கிறதா…!? நாம் இப்போது பயன்படுத்தும் சொற்களெல்லாம் வள்ளுவன் காலத் தமிழில் இருந்ததா… வள்ளுவன் காலத் தமிழில் நாம் எத்தனை சொற்களை அப்படியே அதன் அர்த்தத்தில் எடுத்துக் கையாண்டு வருகிறோம்..!?

சடாரென கண் முன் வந்து நின்ற சில குறள்களில் முக்கியமான ஒன்று..

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடுஅல்ல மற்றை யவை

இதில் வரும் மாடு என்ற சொல்லின் அர்த்தத்திற்கும், நாம் இன்று இவ்வார்த்தையினைக் குறிக்கும் அர்த்தத்திற்கும் தான் எத்தனை வேறுபாடு..!? வள்ளுவர், செல்வம் என்ற அர்த்தத்தில் மாடு எனக் குறித்திருக்க, நாம் நம் வீட்டிலிருக்கும் நான்கு கால் பிராணியினைக் குறித்து வருகிறோம்.

இது போலவே ’விழுமம்’ என்ற சொல் ’சிறப்பு’ என்ற அர்த்தம் கொண்டு விளங்கியது அன்று. அப்படியொரு வார்த்தை இருக்கிறதா வழக்கில் இன்று..!?

இதுபோலவே


அதியன்’ = ‘சிறந்தோன்

இழுதை’ = ‘அறிவின்மை’ 

ஒல்லை’ =  ‘விரைவில்’ அல்லது ‘பழமை



இதைப் போன்று இன்னும் பலப்பல வார்த்தைகளை இழந்து நிற்கிறோம் நாம் இன்று. இவற்றைப் பற்றி நாம் கலந்துரையாடுவதின் மூலம் இச்சொற்களை வழக்குக்குக் கொண்டு வந்து விட இயலுமா..!? இன்றைய தமிழ் குழந்தைகள் படிப்பது முதல் குடிப்பது வரை ஆங்கிலமாயிருக்க, நாம் விவாதிப்பதன் மூலம் மட்டுமே மாற்றம் கொண்டு வந்து விட இயலுமா..!?

முடிந்ததைச் செய்வோம். பல நல்ல தமிழ் வார்த்தைகளை அவற்றின் அர்த்தத்தோடு மீட்போம்.

இப்பதிவின் தொடர்ச்சியாய்  திகழ்மிளிர்சுரேஷ், நட்புடன் ஜமால் இவர்கள் மூவரையும் கேட்காமலே இப்பதிவினைத் தொடரும்படி இணைத்து விட்டேன். செய்வார்களென நம்புகிறேன்.

சனி, 29 நவம்பர், 2008

மும்பை : முன்னிறுத்துவது என்ன!?

    திரு. ஹேமந்த் கர்கரே.. ஒரு காவலராகப் பணியில் அமர்ந்ததிலிருந்து, தன் நாட்டுக்காக அனைத்தையும் செய்யத் துணிந்த, பயமற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி.. இன்றைக்கு நாடு இழந்து நிற்கும் தேசியத் தீவிரவாத எதிர்ப்புப் படையின் ஒரு பிரிவின் தலைவர்..

 

இன்றைக்கு, மும்பையில் நுழைந்த தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பல அப்பாவி மக்களுடன், அவர்களை எதிர்த்து நின்ற கர்கரே போன்ற பல தீரர்களையும் இன்றைக்கு நம் தேசம், மனித சமுதாயம் இழந்து நிற்கிறது. திரு. கர்கரே போன்ற அஞ்சாநெஞ்சர்களுக்கு நம் அஞ்சலிகள்.

    வாழ்க்கை என்பதே பெரும் மாயம்தான். ஆனால், மனிதர் உயிரை மனிதர் பறிக்கும் வழக்கம் என்று ஒழியும்!? மும்பையில் நடப்பது புதிதான சம்பவம் அல்ல. சற்று புதிய வடிவில் நிகழ்த்தப்பட்ட சம்பவம். நம் நாடு தீவிரவாதத்திற்கு இரையாவது புதிதல்ல. நம் அரசியல்வாதிகள் தொலைக்காட்சியில் வீரமாய், அமைதியாய், உணர்ச்சிவசப்பட்டுப் பேட்டிகள் அளிப்பதும் புதிதல்ல.

ஒபாமா அழைத்தார். அவர் அழைத்தவுடன் தீவிரவாதம் நின்றுவிடப் போகிறதா என்ன!? தீவிரவாதம் என்பது ஒரு இன மக்கள், அல்லது ஒரு பகுதி மக்கள் ஒடுக்கப்படுகையில், அதிகாரப்பகிர்வு அவர்களுக்கு மறுக்கப் படுகையில் தோன்றுவது... அதை ஒபாமா அழைத்தவுடன் நிறுத்தி விட இயலுமா!?

தோழர் ரமேஷ் பாபு தொலைக்காட்சி ஒன்றில் குறிப்புக் களத்தினில் தெரிவித்தது போல, அரசியல்வவதிகளே, இது நீங்கள் தூங்கிச் செல்ல பாராளுமன்ற நேரமல்ல.. நீங்கள் சிந்திக்க வேண்டிய தருணம்... முன்னர் ஓரிடத்தில் குறித்தது போல, களங்கள் மாறலாம், மனங்கள் மாறுமா!?

  உடனடித் தீர்வு வேண்டுமெனில், இன்றைக்குப் பல உயிர்களை இழந்து மேலும் பல உயிர்கள் போகாது தடுத்தது போல, தீவிரவாதம் துளிர்க்கும் இடங்களை வேரறுப்பது ஒன்றே வழி.. ஆனால், நீண்டநாள் நோக்கில் பார்த்தோமெனில், என் செய்தால், தீவிரவாதம் குறையும்!? வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தீவிரவாதம் தனைத் தடுக்க நெருக்குதல் ஒன்றே வழி.. ஆனால், உள்நாட்டினுள் மக்களின் மனங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதே தீவிரவாதத்தினை மட்டுப்படுத்த ஒரே வழி.

   மத ரீதியில், இன ரீதியில், மக்களை ஒன்றுபடுத்தி, அவர்கள் எப்படியெல்லாம் இப்பூவுலகில் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள், எவ்விதமான துயரங்களை அவர்கள் சந்திக்கவில்லை என எடுத்தியம்புதல் வேண்டும். முட்களை முட்களைக் கொண்டே களைய வேண்டும். மதத் தீவிரவாதத்தினை மதத்தினடிப்படையில் மக்களை ஒன்றுபடுத்தியே சரி செய்ய முடியும்.

  நிச்சயம், இவ்வழி பயன் கொடுக்க நாளாகும். ஆனால், அடுத்தத் தலைமுறையேனும் தீவிரவாதமற்ற உலகில் வாழ வேண்டுமெனில், பொறுமையாய், மிக மெல்ல மக்களின் மனதில் மகிழ்ச்சி எனும் விதையினைத் தூவ வேண்டும்.. எல்லா நாடுகளும் இதனைச் செய்ய முனைந்தால், நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஆனால், அந்தோ... இலங்கையும், பாலஸ்தீனமும் மக்களின் உரிமைக்காகவல்லவோ போராட்டம் சந்தித்து வருகிறது...!? அங்கே மக்களனைவரும் சம உரிமையுடன் வாழ்வதனை மனித சமுதாயம் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் உலகில் சோமாலியா போன்ற நாடுகள் இருக்கும் வரை மக்களை சமாதானப் படுத்தும் விதம்தான் என்ன!?

ஏதேனும் வழியிருப்பின் சொல்லுங்களேன்....