சனி, 15 நவம்பர், 2008

என் செய்வாய் தமிழா..!?


        நாம் தமிழரா, திராவிடரா, இந்தியரா...!? இந்தக் கேள்வி நம்மை நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய சூழல் வந்தமைக்காக வருந்துகிறேன்.. நான் மட்டுமே அல்ல..தமிழர் அனைவருமே வருந்த வேண்டும்...
      

        பத்து மாதங்கள் சுமந்து நம்மைப் பெறுகிறாள் தாய்.. நம்மை வித்தாய் விதைப்பவர் தந்தை.. அதன் பிறகே உடன் பிறப்புகளும், பிற உறவுகளும், சமூகமும் நமக்கு அறிமுகமாகிறது... உலகில் மனிதன் தனக்கென பரிமாறிக் கொள்ளத் துவங்கிய முதல் விவரம் மொழி.. தாய் நமக்குக் கற்றுக் கொடுத்து, நம் நாவினில் சரளமாய் முதலில் நுழையும் மொழி தாய் மொழி.. அந்தத் தாய் மொழியின் படி நமக்கு அமைந்தது தமிழ் மொழி.. அதனால் நாம் தமிழ்ர்.. இந்த மண்ணை நாம் அறிவது, உணர்வது இதற்கு அடுத்தே...
      

       அதனால் நம்மில் பிரிந்து சென்ற உடன் பிறப்புகளையும், மற்ற சமூகமும் தான் திராவிடமும், இந்தியமும்... நாம் முதலில் தமிழராய் இருப்போம் என்ற பெண் கவியின் சொற்கள் மிகச் சரியானது.. இருபது வருடங்கள் கடந்தும் ஓருயிரின் இறப்புக்குப் பழி வாங்கத் துடிக்கும் தமிழர்களும் இருக்கிறார்கள்.. லட்சக் கணக்கில், சுனாமியிடம் கொடுத்த உயிரைக் காட்டிலும் அதிக இழப்பினை சந்தித்துத் துயர் படும் தமிழ்ர்களும் இருக்கிறார்கள்..
        

        பல கோடிகளை சம்பாதித்து, இன்னும் பல கோடிகளை சம்பாதிக்கத் துடிக்கும் தமிழருக்கு, ஓருயிர் போனதற்கான காரணத்தினை மன்னிக்க முடியவில்லை.. தலைவர்கள் கொல்லப்படுவது தவறான செயலே.. அதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. இந்தியாவிலோ, இலங்கையிலோ தலைவர்கள் படுகொலைகள் புதிதுமல்ல. நம் தலைவர்களே அறைகூவல் விடுத்துப் பழிவாங்கிய சம்பவங்களும், அதை போகிற போக்கில், இத்தனை பேர் இறந்து விட்டனரே என்ற போது, ஆலமரத்தையும், அதன் சருகுகளையும் ஒப்பிட்டு உதாரணம் கூறி, ஒரு சமூகமே ஓட ஓட விரட்டி வேட்டையாடிய சம்பவத்தினை நியாயப்படுத்தியத் தலைவரையும் கண்டது இந்த இந்திய பூமி..
        

          ஒரு சமூகமே தொலைந்தாலும் பரவாயில்லை.. இராமரைப் போல, இராஜ இராஜ சோழனைப் போல, முகம் மலர்ந்து சிரித்துத் தன் புன்னகையால் மக்கள் மனம் கவர்ந்து ஓட்டு வேட்டையாடும் தலைவர்கள் இறந்து விடக் கூடாது... அந்த இறப்பு எத்தனையோ தலைமுறைக்கு முன்னால் நடந்தால் கூட, அதை இன்றும் பிடித்து வைத்திருந்து காரணம் கூறி, நம் சகோதரர்கள் படும் அவதியையும், உயிரிழப்பினையும் ஒதுக்கித் தள்ளும் மானிடக் கழுகுகளை என் செய்வோம்!?
        

         நாகரிகமாக ஆடையணிந்து சட்ட மன்றங்களுக்கும் , பாராளும்ன்றத்துக்கும் போகும் கொலையாளிகளை, வாய் கிழியப் பேசும் அரசியல்வாதிகள் என்ன செய்து விட்டனர்!? பல முக்கியப் பதவிகளைக் கேட்டுப் பெறும் அளவில், அவர்கள் செல்வாக்கு படைத்தவர்களாய் இருப்பதையும் மௌனமாய் பார்த்து வருகிறோம். சந்தர்ப்பம் வாய்த்தபோது தலைவரின் குடும்பத்திற்காய் விசுவாசத்தினை உறுதி செய்யத் தெருவிலிறங்கிக் கொலைத் தொழில் புரிய உங்களுக்கு வெட்கமற்றுப் போனபோது, நீங்கள் மன்னிக்க இயலாமை பற்றி பேசுவது வேடிக்கைதான்...
       

         சுனாமி கூடக் கொண்டு செல்லாத அளவிலான உயிர்களை ஒரு நாட்டின் அரசாங்கமே கொண்டு சென்று கொண்டிருக்க, வாய் பொத்தி மௌனிகளாக இருப்பதோடு அல்லாது, பேசினால் மாபாதகம் என்கிறோம்.. என்னே மனிதாபிமானம்!? நாட்டின் குடிமக்கள், மிக சாமான்யன் கொல்லப் படுகிறான் சொந்த நாட்டின் அரசாங்கத்தால்.. அதைப் பற்றிக் கவலைப் படுங்கள் என்றால், ஒரு தலைமுறைக்கு முன்னால் நடந்தவற்றை சொல்லி பகடி பேசும் ஆட்களை இன்னும் தமிழன் தலைமையில் வைத்திருப்பது வேதனை..
       

          போகும் உயிர்கள் யாருடையதோ எவருடையதோ அல்ல.. என் மாமனுடையது.. அண்ணனுடையது.., அக்காளுடையது.., மருமகனுடையது..,பெரியன்னை,சிற்றன்னை இப்படி உதிரத்தோடு கலந்த உறவுகள் அங்கே போய்க் கொண்டிருக்கிறது... என்றோ போய்விட்ட உயிரினை நினைத்து, இன்று போகும் உயிர்களைக் காக்க முனைய மாட்டோம் என்று சொல்வோமானால், நீங்களெல்லாம் மனிதராய் பிறந்து என்ன பயன்..!? நாம் இங்கு பேசுவது சாதாரணக் குடிமக்களின் பரிதவிப்பைப் பற்றி மட்டுமே.. ஆயுதம் ஏந்தியவர் பற்றியல்ல...
         

          ஒருவர் உயிர் போகும் போது அந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியும்.. ஒரு சமூகமே உயிரை தொடர்ந்து இழந்து தடுமாறுகையில், யாருக்கு நிவாரணம்..!? பணத்தினை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்!? வீடு வாசலற்று, வானத்தின் மேலே குண்டுகள் சுமந்த விமானம் வருகிறதா எனப் பார்த்தவாறு வாழ்நாளினை ஓட்டுபவர்க்கு பணம் என்ன தரும்!? வீட்டின் மேல் விழப்போகிற குண்டினை நடு வழியினில் தடுத்து நிறுத்தி, ஏவியவன் வீட்டில் கொண்டு போய்ப் போடுமா!? இறக்கும் மக்களைப் புதைக்கையில் உடன் புதைக்கவா!? அல்லது எரிக்கையில் உடன் எரிக்கவா!?
       

       தமிழனின் நிலையை நினைத்தால், இன்னும் அந்தோ பரிதாபம்..ஆட்சியில் பங்கு கேட்டு சுற்றியவர்கள், தமிழரைப் பற்றிப் பேச வேண்டிய சூழல் வந்தவுடன் ஆட்சியில் பங்கா.., அது எதற்கு எனக் கேட்கிறார்களே...!? இவர்கள் தாம் தமிழினத்தினைக் காக்கப் பிறந்தவர்கள்.. இனியேனும், தமிழன் விழிப்புடனிருக்கட்டும்... எந்த தலைவரின் பெயர் சொல்லி, தமிழருக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்குக் குரல் கொடுக்கத் தயங்குகிறார்களோ, அவர்களை துச்சமாய் மதிப்போம். அவர்கள் சார்ந்தவர்களை தலைநகர் அனுப்பி சுகபோகத்தில் திளைப்பதை நிறுத்துவோம்..
        

       தமிழா, நீ முதலில் தமிழனாய் இரு.. பிறகு இந்தியத் தலைவர்களின் வாலாயிருக்கலாம்.. இன்று தமிழன் படும் அவதி பற்றி நினைக்கவும் நேரமில்லாத மனித நேயமற்றவர்களுக்கு, பல வருடங்கள் முன் மடிந்து போன உயிரை நினைத்துக் கவலையாய் இருக்கிறதாம்.. ஒவ்வொரு தலைவரைக் கொன்ற இனத்தினையும் தள்ளி வைபது என்றால்., இன்றைக்கு உயர் பதவியிலிருப்பவர்கள் எப்படி அப்பதவிக்கு வந்திருக்க முடியும்!? இந்தியாவுக்குள் இருப்பதால் அவர்களுக்கு மன்னிப்பு.., தமிழகம் விட்டு சென்று விட்டதாலேயே, இலங்கைத் தமிழ்ரின் துயர் பற்றிக் கவலை இல்லையோ!?
          

         அங்கிருக்கும் தமிழர்கள், இன்றைகு பல நாடுகளிலும் சென்று நாட்டுக்குப் பொருளாதாரத்தினை ஈட்டித் தரும் மற்ற இந்தியர் போலவே அல்லவா!? அவர்களின் உயிரும் உயிர் தானே!? தலைவர்களின் உடல்களில் மட்டுமே இரத்தம் ஓடுகிறதா அல்லது, அவை மட்டுமே சிவப்பாக இருக்கிறதா...!?
          

       மண்ணில் பிறக்கும் போது யாரும் பல உயிரை சுமந்து பிறப்பதில்லை.. எல்லோருக்கும் ஒரு உயிர் தான்.. ஒவ்வொரு மனிதனின் உயிரும் போகும் போது ஓருயிராய் தான் போகிறது.. அரை உயிர், கால் உயிர் என எதையும் மிச்சம் விட்டு செல்வதில்லை.. தலைவர்கள் உயிர் போவது போலதான் குடிமக்களின் உயிரும் போகிறது.. இதில் ஓருயிரைப் பற்றி மட்டும் பல்லாண்டுகள் சிந்தனை எதற்கு!? அதைப் போல பல லட்சம் மக்களைக் காவு கொடுத்து விட்ட மக்களைப் பார்த்து எங்களால் மன்னிக்க இயலாது.., அவர்கள் படும் துயரினைத் தீர்க்க எதையும் செய்ய மாட்டோம்.. செய்பவர்களையும் தூற்றுவோம் எனச் சொன்னால்.., இவர்களெல்லாம் மானிடராய் பிறந்ததெதற்கு எனத் தோன்றுகிறது.. பூமிக்குப் பாரம்...
           

         சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தமிழனின் கண்களுக்கு வெளிச்சமில்லை...என் செய்வாய் தமிழா!????கருத்துகள் இல்லை: