புதன், 18 பிப்ரவரி, 2009

நாட்டின் எதிர்காலங்கள் உங்கள் கைகளில்..

.

என் மனநிலை காரணமாகவா அல்லது என்னைச் சுற்றி நடப்பவையே அப்படித்தானா தெரியாது.., என் மனதில் பதிந்த சம்பவங்களில் பெரும்பாலும் சோகமானவை. இந்த சம்பவம் நடந்து சில வருடங்கள ஆகிப் போயிற்று.. அப்போது நான் சென்னையில்தான் இருந்தேன் என்ற போதும், எதன் காரணமாகவோ விடுப்பெடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றிருந்தேன்.

சரியாக அன்றைக்கு 18 -02. பள்ளிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மாதிரித் தேர்வுகள் நடந்து கொண்டிருந்த நேரம். இந்தப் பதிவிற்கு உரியவன் எங்கள் வீட்டருகே வசித்து வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். அப்பா வழியில் சற்று தூரத்து உறவும் கூட. அவனுடைய அப்பா எங்களோடு அத்தனை உறவு பாராட்ட மாட்டார் என்ற போதும், அவனும் , அவனின் ஒரே மூத்த சகோதரியும், என்ன படிக்கலாம்..., என்ன செய்யலாம் என்பதில் எனது மற்றும் சகோதரியின் அறிவுரைகள் கேட்டு வருவது வழமைதான்.

மிகவும் அமைதியான, பயந்த சுபாவமுள்ள பையன். இன்றைக்கு அவன் இல்லை என்பதற்காக சொல்லவில்லை. அத்தனை மரியாதை. அத்தனை நேர்மையான பையன். எப்படி இத்தனை நல்லவனாய் என ஆச்சர்யமூட்டிய பையன். அவன் அப்போது பள்ளி இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்தான். மாதிரித் தேர்வுகள் எழுதினான்.

தேர்வு எழுதிக் கொடிருந்தபோது, தேர்வறையில் இவனுக்கு அருகில் கீழே சிறு தாளொன்று பறந்து கொண்டிருந்திருக்கிறது. அதைக் கவனித்தத் தேர்வுக் கண்காணிப்பாளர் அருகில் வந்து எடுத்துப் பார்த்திருக்கிறார். பார்த்து எழுதுவதற்காக தயாராக பதில் எழுதி வைக்கப்பட்டிருந்த தாள் அது. ஆசிரியைக்கு அதைக் கண்டவுடன் பயங்கரமான கோபம். இவனை எழுப்பி, கணக்கற்று அடித்திருக்கிறார். இவனோ, நான் அந்தத் தாளினை உபயோகிக்கவில்லை.. என் கையெழுத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள் எனச் சொல்லியிருக்கிறான். அவர் கேட்கவே இல்லை.

தேர்வறையிலிருந்து அவனை வெளியேற்றியதோடு கண்டபடி திட்டவும் செய்திருக்கிறார். இவ்வருடம் நீ தேர்வெழுத விடாமல் செய்கிறேனா இல்லையா எனப் பார் என்றெல்லாம் சொல்லியிருந்திருக்கிறார். ஏற்கனவே பயந்த சுபாவமுள்ள பையன். என்ன செய்வதென்றறியாமல் பள்ளியிலேயே அங்கேயும், இங்கேயுமாய் சிறிது நேரம் உலாத்தியிருக்கிறான். பள்ளி மைதானம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலேயே மிகப் பெரிது.. நாங்கள் படிக்கையில், எங்காவது மூலையில் சென்று அமர்ந்து கொண்டு விட்டால் கண்டு கொள்வது மிக சிரமம் என்பதால்.., எங்கெங்கோ சென்று அமர்ந்து கொள்வோம்.. ( ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தால் தானே... )

அப்படிப்பட்ட பள்ளியில் மனம் போனபடி சுற்றிய அவன், இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்து பள்ளியில் ஒரு மூலையில் நடந்து கொண்டிருந்த கட்டிட வேலைகளுக்காகக் கிடந்த கயிறொன்றினை எடுத்துக் கொண்டு, அவனது வகுப்புக்கே வந்து.., ( தேர்வறை அதுவல்ல.. ) விட்டத்தில் கயிற்றைக் கட்டித் தொங்கிப் போனான். பெஞ்சினை அவன் உதைத்த ஓசைகள் கேட்டிருக்கின்றது. ஆனால், யாரும் சென்று பார்க்கவில்லை. உயிர் போய் விட்டது.

அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டார். மாணவர்கள் போராட்டம் செய்து பார்த்தனர். இதற்கிடையில், உண்மையாகவே தாளினை தயார் செய்து வைத்திருந்து உபயோகித்த மாணவன், அன்றைய இரவெல்லாம் கனவு கண்டு பயந்து அழுது, ( இருவரும் நண்பர்களாம்.. ) இருவருக்கும் பொதுவான வேறு பள்ளியில் படிக்கும் நண்பனிடம் சொல்லித் தன்னாலேயே தன் நண்பன் இறந்து போனதாக சொல்லித் துடித்திருக்கிறான்.

அப்போது செய்தித்தாள்களெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு இந்த சம்பவத்தினை எழுதின. ஆசிரியை, அவன் தான் எழுதினான்,தான் பார்த்தேன் என சாதித்ததாகவும் செய்தித் தாள்கள் எழுதின. அவருக்கு என்ன..!? அடுத்த வருடம் மாறுதலோடு பணி மீண்டும் கிட்டிவிட்டது. இழப்பு யாருக்கு...!?

மேலும், அது யாருடைய கையெழுத்து என அவனுக்குத் தெரிந்தும் இருந்திருக்கிறது. இருந்தும் மூச்சு விடாமல் தன் மூச்சையே நிறுத்திக் கொண்டானே...

இறந்து விட்டதால் சொல்லவில்லை. சில பல பிரச்சனைகளில் அந்த வயதிலேயே, அவனது நேர்மை கண்டு வியந்திருக்கிறேன். தன்னால் மருத்துவமெல்லாம் படிக்க இயலாது. எனக்கேற்றது போல் எளிதான படிப்பு தான் ஏதேனும் படிப்பேன் எனச் சொல்வான். நான்கைந்து வருடங்கள் கடந்த பின்னும் இந்த தேதி வருகையில் அவன் நினைவு வருவது தவிர்க்க இயலாதது. :(

மிக மிக பயந்த சுபாவமுள்ள பையன் அவன். அவன் உயிரை விடத் துணிவான் என்பதை எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை...

ஆனால், தேர்வெழுத முடியாது போனால் என்ன செய்வது என்ற அழுத்தமே அவனுக்கு அந்த்த் துணிச்சலைக் கொடுத்திருக்க வேண்டும்.

அவர்கள் வீட்டில் அவன் ஒரே பிள்ளைதான். அவர்கள் துடித்த துடிப்பு... பிறகு, அந்தத் தாளை எழுதிய மாணவன், தான் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும், தன் நண்பனின் இறப்புக்குக் காரணமான அந்த ஆசிரியைக்கு வேலை நீக்க உத்தரவு வாங்கித் தந்தே ஆக வேண்டும் எனத் துடித்தபோது, அவன் எதிர்காலம் முக்கியம் என விட்டு விட்டார்கள்..

ஆசிரியை, அதன் பிறகும் தன் கடமையைத்தான் தான் செய்ததாகச் சொன்னதாகக் கேள்வி...

மன்சாட்சியற்று, விசாரிக்காமல் முடிவெடுத்து, அதன் பிறகும் மனம் கலங்காமல் செயல்படுபவர்களை என்ன சொல்ல இயலும்..!?

ஆசிரியப் பணி என்பது புனிதமான பணி... ஆனால், இன்றைய ஆசிரியர்கள்...!?


இன்றைக்கு தமிழகத்தில் மெக்காலே கல்வி முறையிலிருந்து மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்களுக்கு அவ்வப்போது புத்தாக்கப் பயிற்சிகளும் நடைபெறுகின்றன.

ஆனால், அவையெல்லாம் என்ன பயன் தருகின்றன என்பதுதான் கேள்வி. பாடங்களைக் கற்பிக்கும் முறை மாறியிருப்பதற்காக மட்டும் பயிற்சி கொடுத்து என்ன பயன்..!?

ஆசிரியர்கள் நல்ல மனநிலையில் தான் இருக்கிறார்களா.., இவர்களின் கீழ் மாணவர்கள் படிக்கலாமா என உறுதி செய்து கொண்டு ஆசிரியர்களை நியமிப்பதும், அவர்களின் மனநிலை தொடர்ந்து எவ்வித வக்கிர, காழ்ப்புணர்ச்சி, மற்றும் மனச்சிதைவு ( குடும்ப நிகழ்வுகளால் ) ஏதும் இல்லாமல் இருக்கிறார்களா என உறுதி செய்து கொள்வதுமல்லவா முக்கியம்...


ஏனென்றால், அவர்கள் தான் நாட்டின் எதிர்காலங்களை உருவாக்குபவர்கள்..


.

கருத்துகள் இல்லை: