சனி, 31 ஜனவரி, 2009

முத்துக்குமாரும் விஸ்வநாத் பிரதாப் சிங்கும் ….

 

27-01-2009 அன்று இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், உயர்திரு. ரா. வெங்கட்ராமன் அவர்கள் இயற்கை எய்தினார். இந்திய அரசு ஒரு வார கால துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்தது.

 

27-11-2008 அன்று, இந்தியப் பிரதமர்களில் என் நினைவில் பதிந்தவரை சிறந்த இந்தியப் பிரதமராக செயல்பட்ட, இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்காகப் போராடிய 10 ஆம் இந்தியப் பிரதமராகப் பதவி வகித்த உயர்திரு. விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள் இயற்கை எய்தினார். அவர் இறந்த செய்தி, ஊடகங்களில் சொல்லப்பட்டது.

 

நாடே மும்பைத் தாக்குதலின் பிடிமானத்தில் சிக்குண்டு, அதிர்ந்து போயிருந்ததால், ஒரு பெரும் தலைவர் இறந்ததற்கான அறிகுறியே அறியப்படாமல் அவரது இறப்பு பெருவாரியாகப் பதியப்படாமல் போனது.

 

மும்பைத் தாக்குதலில் இறந்த சாமான்யர்களுக்குக் கிடைத்த மரியாதையில் முன்னாள் பிரதமராக பதவி வகித்த ஒரு தலைவருக்குக் கிடைக்கவில்லை என்று சொன்னால், இந்திய அரசு நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயிரையும், பிரதமரின் உயிருக்கு சமமாக மதிக்கத் துவங்கி விட்டதா…!? இது உண்மை என்றால், நாம் நிச்சயம் மகிழலாம். அப்படியானால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயிரின் மதிப்பும், உயர்திரு. மன்மோகன் சிங் அவர்களின் உயிரின் மதிப்பும் ஒன்றுதானா…!? இந்தியா தன் நாட்டுக் குடிமக்களின் பாதுகாப்பின் மேல் அத்தனை அக்கறை கொண்டுவிட்டதா……!???

 

ஏன் இந்த சந்தேகம் வந்ததென்று கேட்கிறீர்களா…!? 

இதோ, ஒரு முன்னாள் இந்தியப் பிரதமரின் தன் குடிமக்களுக்கெதிரான இனப் படுகொலைகளைப் பற்றி வழங்கிய அருளுரை....

“When a great tree falls, the earth shakes.”

 

இதனைத் தமிழ்ப்படுத்தினால், “ஒரு ஆலமரம் விழும்போது, நிலத்தில் சிறு அதிர்வுகள் தொடர்வது நிகழத்தான் செய்யும்”.

 

இது 1984 ஆம் ஆண்டு திருமதி. இந்திராகாந்தி அவர்களின் படுகொலைகளுக்குப் பிறகான பேட்டியில் அவரது மகனும், அவருக்கு அடுத்துப் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டவருமாகிய உயர்திரு. ராஜிவ்காந்தி அவர்கள் கூறிய அருமையான கருத்துரையே.

 

அதற்கும் மேல், அப்போதைய காங்கிரஸ் முக்கியத் தலைவராக இருந்த திரு. பல்ராம் ஜாக்கர் வெளியிட்ட அறிக்கை,

“To preserve the unity of India, if we have to eliminate 20 million Sikhs, we will do so.”

 

அதாவது, இந்திய ஒற்றுமையைக் காக்க 2 (இரண்டு ) கோடி சீக்கியர்களைக் அகற்ற நேருமானால் ( எப்படியென்பதை நீங்களே யோசிங்க… ), அதை நாங்கள் நிச்சயம் செய்வோம்.

 

என்ன சொல்ல இருக்கிறது…, இதற்கும் மேல்…?????

 

குவாத்ரோச்சியா… பிரபாகரனா.. யார் வேண்டும்…???

 

உயர்திரு. விஸ்வநாத் பிரதாப் சிங்கின் இறப்பு அதிர்வுகளை ஏற்படுத்தாதது, அவர் மும்பைத் தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் நிகழ்ந்ததால் மட்டுமாக இருக்க இயலுமா…!?

 

மேலே நாட்டின் குடிமக்களைப் பற்றிய ஆளும் அரசினரின் கொள்கை விளக்கங்கள் நம்மிடம் இருக்கிறது இல்லையா…. அப்படியானால், ஏன் ஒரு தலைவரின் இறப்பினை இன்றைய அரசு பெரும் பதிவாகக் கண்டுகொள்ளவில்லை…??

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர். ராஜிவ்காந்தி அவர்களின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து போஃபர்ஸ் ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்த திரு. வி.பி. சிங் அவர்கள், அவ்வூழலில் பின்னாளில் குற்றம் சாட்டப்பட்ட அன்றைய பிரதமரான, ராஜிவ் காந்தி அவர்களால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

 

இன்றைக்கு, திரு. ராஜிவ்காந்தி அவர்களின் துணைவியார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியே உயர்திரு.மன்மோகன் சிங் அவர்களைப் பிரதமராகக் கொண்டு நடந்து வருகிறது. எனில், முன்னாள் பிரதமராகிய உயர்திரு. விஸ்வநாத் பிரதாப் சிங்கின் இறப்பு கண்டுகொள்ளப் படாமல் போனதில் வியப்பேதுமில்லையே…???

 

மேலும், ராஜிவ்காந்தி அவர்களோடு போஃபர்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட திரு. ஒட்டாவியா குவாத்ரோச்சி அவர்களை இந்தியாவுக்குள் கொண்டு வர இயலாமல் இந்தியத் தலைமை காவல் மற்றும் உளவு அமைப்பான ( ரா அல்ல ) சி.பி.ஐ தடுமாறுகிறது. போஃபர்ஸ் வழக்கு எதைப் பற்றியது என்பது பெரும்பாலும் நாம் எல்லோரும் அறிந்ததுதான்.

 

ராணுவத் தளவாடம் வாங்கியதில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட அந்த வழக்கிலிருந்து இறந்து போனதால் மட்டுமே விசாரிக்க முடியாமல் போய்விட்ட காரணத்தினால், முன்னாள் பிரதமர். திரு. ராஜிவ்காந்தி அவர்களின் பெயர் வழக்கிலிருந்து நீக்கப்பட்து. ஏனெனில், அவரது தரப்பு விளக்கங்கள் தர அவரால் மீண்டு வர இயலாது அல்லவா…!? ஆனால், குவாத்ரோச்சியைக் கொணர்ந்தால், என்ன நடந்தது என்பதனை நிரூபிக்க இயலுமே. என் செய்வது..!? இன்றைக்கு நடப்பது ராஜிவ் அவர்களின் துணைவியார் தலைமை வகிக்கும் கட்சியின் ஆட்சிதானே… நடக்குமா என்ன…!?

 

ஒருவேளை, உயர்திரு. விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் இறப்பு, மும்பைத் தாக்குதலில் இறந்த சாமான்யர்களின் இறப்பின் காரணமாக மட்டுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று சொல்வார்களேயானால், திரு. ராஜிவ்காந்தி அவர்கள் ஒருவரின் இறப்புக்காக ஏன் தமிழினப் படுகொலைகளை மேம்போக்காகத் தடுப்பது போல் பாசாங்கு மட்டுமே செய்ய வேண்டும்…!????

 

சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி கொடுத்து, தளவாடங்கள் வழங்கி, உளவுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு, ”பாதுகாப்பு வளையம்” என்று சொல்லி சிங்கள அரசு செய்யும் தமிழ் இனப் படுகொலைகளைக் கண்டும் காணாமல் இருந்து விட்டு, போர் முடியும் தருவாயில் சென்று, அப்பாவித் தமிழர்களை விட்டு விடுங்கள் என்று சொல்லி வருவது வேடிக்கை இல்லையா…!?

1988 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படை, இலங்கையில் செய்த காரியங்கள் என்னென்ன…!? தினந்தோறும் செய்திகளைக் கேட்போரும், செய்தித்தாள் வாசிப்போரும் அறிந்த ஒரு செய்திதான். இன்றைக்கு முல்லைத் தீவுப் பகுதியில், தமிழின மக்கள் வேற்றிடம் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் 4 லட்சங்களுக்கும் அதிகமான மக்கள் அங்கிருக்கையில், அவர்களைப் “பாதுகாப்பு வளையம்” என்று அறிவித்து விட்டால், அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கையையும் குறைக்க சிங்கள அரசுக்குக் காரணம் கிடைத்து விடுமில்லையா…???

எந்தப் படுகொலையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். அது ராஜிவ்காந்தி அவர்களின் இறப்பாகட்டும், தமிழர்களின் அல்லது சீக்கியர்களின் இறப்பாகட்டும்… ஆனால். திரு. ராஜிவ்காந்தி அவர்களின் கூற்றுப்படி, “ ஒரு ஆலமரம் விழும்போது அதன் பின்னான நில அதிர்வுகள் நிகழ்வது வெகு இயல்பான “ ஒன்றென்றால், இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் தமிழின மக்களைப் படுகொலை செய்ததும், தமிழினப் பெண்களை பலாத்காரம் செய்த செயலுக்கும் பின்னான இயல்பான அதிர்வாக 1991 மே 21 சம்பவம் ஏன் பார்க்கப்படவில்லை….????

 

அப்படிப் படுகொலை செய்யப்பட்ட மனிதரின் பெயருக்குக் களங்கம் விளையாமலிருக்க திரு, குவாத்ரோச்சி அவர்கள் இந்தியாவின் கைகளில் இன்னும் பிடிபடாமல் நழுவ முடிகிறது. பிரபாகரனுக்கு இங்கே வாதாட யாரும் தயாராக இல்லை. அதே நேரத்தில், போஃபர்ஸ் என்பது ராணுவத் தளவாடம். அது சரியான செயல்திறனற்ற ஒன்றாக இருந்திருந்தால், எத்தனை ராணுவத்தினரின் உயிர் சென்றிருக்கும்…???? அந்த ராணுவத்தினரின் உயிரை விட, இந்தியப் பிரதமராகப் பதவி வகித்து விட்டதால் மட்டுமே அப்படி ஒருவரின் உயிர் என்ன வெல்லக்கட்டி…!?

 

போஃபர்ஸின் செயல்திறன் நிரூபிக்கப் பட்ட ஒன்று எனச் சொல்பவர்களுக்கு, ஒரு கேள்வி.. போஃபர்ஸுக்குப் பதிலாக நிராகரிக்கப்பட்ட தளவாடத்தின் செயல்திறனை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா…???? அது, போஃபர்ஸை விட மேம்பட்டது என்று கொண்டால், இன்னும் பல ராணுவத்தினரின் உயிர்களைக் காத்திருக்கும் வாய்ப்பு உண்டல்லவா..!?

இப்போது சொல்லுங்கள், இந்திய அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டியது குவாத்ரோச்சியைப் பிடிப்பதா அல்லது வேறு ஏதேனும் ஒரு செயலா…!?

 

இப்படி, ஒரு உயிருக்காக இனப் படுகொலைகளை ஆதரித்த, போய்விட்ட உயிர்களைப் பற்றியக் கவலையான கேள்விக்கு, அது வெகு இயல்பாக நிகழக் கூடிய ஒன்று என மனிதாபிமானமற்று பேசிய ஒரு உயிர் போய்விட்டது என்ற காரணத்தினால், ஒரு இன மக்களுக்கு உதவ வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பித்துக் கொண்டு, அவர்களைப் பழிவாங்க, அவர்களுக்கெதிரான அரசுக்கு உதவிகள் வழங்கும் அரசு ஆட்சியிலிருக்கையில், முத்துக்குமார் போன்ற இளைஞர்கள் உயிரை ஈந்து என்ன பயன்…????

 

இனி ஒரு தமிழனும் வீணாக உயிர் துறக்காதீர்கள். இலங்கையில் போகும் அப்பாவித் தமிழர்களின் குருதியே போதும் போதும் என்ற அளவில் போய்க் கொண்டிருக்கிறது… இதற்கு முடிந்தால் மஹாத்மாவின் வழியில் ஒரு வழி காண முயலுவோம். இல்லையேல்……. :(

5 கருத்துகள்:

திகழ்மிளிர் சொன்னது…

ஏற்கனவே
காலம் கடந்துவிட்டது
இன்னும் காலம் தாழ்த்தினால் ?????????

தமிழ்தினா சொன்னது…

நீங்கள் ஆயுதம் ஏந்திப் போராட எண்ணினால், அன்றைக்கு 2 கோடி சீக்கியர்களுக்குச் சொன்னதை, இன்றைக்கு 6 1/2 கோடி தமிழர்களை அகற்றுதலைப் பற்றி அரசு ஒருவேளை சிந்திக்கக் கூடுமே.... பயனிலாக் காரியங்களைச் செய்து என்ன பயன்...!?

காலம் தாழ்த்தக் கூடாது என்பது சரியே. ஆனால், அனைத்துத் தமிழர்களும் முதலில் அறப் போராட்டத்துக்குத் தயாராயிருக்கிறார்களா... தமிழன் இன்னும் இன்றைக்கு நடக்கும் அரசில் பதவி சுகம் வகித்து வருவது நாமறிந்ததுதானே.... :(

தமிழ்தினா சொன்னது…

கருத்துக்கு நன்றி நணபர். திகழ்மிளிர்....

நட்புடன் ஜமால் சொன்னது…

எல்லா போதைகளுக்கும், அதிலிருந்து வெளியேற வழி சொல்லித்தருகிறார்கள்.

வெளிவரவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாத இடம் தான் பதிவு போதை, அதிகார போதை.

மணதலவிலாவது அறப் போராட்டத்துக்கு தயாரா.

செயல் வடிவம் பிறகு யோசிப்போம்

தமிழ்தினா சொன்னது…

நன்றி ஜமால் அண்ணா.

இங்கு சொல்லப்பட்டிருப்பதை விட சொல்லப்படாத செய்தி உணர்த்துவதே அதிகம்.

அவர்களுக்குக் காரணம் இருந்தால், ஒரு முன்னாள் பிரதமரின் இறப்பையே இருட்டடிப்பு செய்ய இயலும் என்கையில், பாவம்.. முத்துக்குமார் போன்ற இளைஞரின் இறப்பு எம்மாத்திரம்...!?

மேலும், பழிவாங்கல் எண்ணம் உள்ளே நுழைந்த பிறகு, மன்னிப்பு என்ற வார்த்தைகளுக்கு இடமேது...!?

பதவியைத் துறந்தவர், இன்றைய இந்தியாவின் தெரசாவே இவர்தான் என சொல்லிக் கொள்ளலாம்... உள்ளே இருப்பது என்ன என்பது விளங்காத விவரம்... நடப்பது எல்லாம் சிறிது சிறிதாக அவர்களின் எண்ணங்களை வெளிக்கொணரத்தான் செய்கிறது...

தமிழகத்தில், இன்னும் தமிழர்களைக் காப்பது பற்றிய வார்த்தைகளை உதிர்க்க அஞ்சுகிறார்கள்... இதில் போர் நடக்கும் காலங்களில் அப்பாவி மக்களின் உயிர்கள் சில போகத்தான் செய்யும் என ஆசி கூறும் தலைவி ஒருவர் வேறு...

அடுத்து ஆட்சிக் கட்டிலில் ஏற்றி வைக்கட்டும் அவரை, தமிழர்கள்.. அவர் தமிழருக்கு எதிரான கருத்துக்களை சொல்லி. அதற்கு அனைத்து வகையிலும் வலுவூட்டுவார்.. தமிழன் இளிச்சவாயன் என சொல்லித் தெரிய வேண்டுமா என்ன...!?